கோவையில் சில நாட்களுக்கு முன்பாக இருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தற்போது திருப்பூரிலும் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆட்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்துவது அதிகப்படுத்தப்பட்டதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று மெல்ல குறைந்து வருகிறது. 

இதற்கிடையில், மழைக்காலம் என்பதால் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றுடன் மக்களிடையே டெங்கு வைரசும் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா, டெங்குவை தொடர்ந்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.

v1

அதன்படி திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அடுத்த சோலிபாளையம் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அந்த நபர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக 2 தினங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் தொடர்பான ரத்த பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனையின் முடிவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட நிலையில், திருப்பூரிலும் ஒருவருக்கு இன்று பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கும் , ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண்ணுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

h2

இரண்டு பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரையும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றும், மற்றொருவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், “கோவையில் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.  பன்றி காய்ச்சலால் தற்போதைக்கு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை” என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் பன்றி காய்ச்சல் உறுதியாகி வருவது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.