கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி, திருவண்ணாமலை மலை உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில், அங்குள்ள மலையே பக்தர்களால் சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு  அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் தீபம் ஏற்றப்பட்டபோது, அண்ணாமலையாருக்கு பக்தர்கள் அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பி அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். 

அதே போல், கார்த்திகை பவுர்ணமி தினமான இன்றைய தினம் தமிழகத்தில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு, சிவ ஆலயங்களிலும் முருகன் கோயில்களிலும் இன்று மாலை ருத்ர தீபம் ஏற்றப்படுகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய தினம் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

அதே போல், இன்று மகாதீபம் ஏற்றப்படுவதால், இன்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, இன்று மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருள இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, இன்று மாலை மிகச் சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சன்னதியில் இருந்து ஆடிய படியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படுகிறது.

மிக முக்கியமாக, கிட்டதட்ட 2668 அடி உயர மலை உச்சியில் அப்போது மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. அப்போது, கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்வார்கள். 

குறிப்பாக, கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில், சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுவதால், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்றும் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால், திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது ஐதீகமாக உள்ளது.

முக்கியமாக, கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களும் சேர்ந்து மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே இந்த முறை கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால், கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். இந்த மகா தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.

அதே நேரத்தில், கிரிவலம் வரும் பக்தர்கள் யாரும், இந்த முறை தீபம் ஏற்ப்படும் மலை மீது ஏறவோ, அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என்றும், கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.