“அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்கள் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக” எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இந்த போராட்டமானது பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக தலைநகர் டில்லியில் உள்ள அதன் எல்லை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பல கட்டங்களாக பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்து, போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

இப்படியான நிலையில் தான், தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன்பு தோன்றி “3 புதிய வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக” அறிவித்தார். 

அத்துடன், “வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், கூறினார். 

இவற்றுடன், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றும், பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் தான், “அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக எதிர்க் கட்சிகள் மிக கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. 

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.

“நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது, அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்!” என்று, வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்

“உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! 

அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

“பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட் செய்துள்ளார்.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

“மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும், வைகோ வலியுறுத்தி உள்ளார்.

திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தை கட்சி

“தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்!” என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கனிமொழி, திமுக எம்.பி.

“மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி, ஜனநாயகத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய வெற்றி” என்று, திமுக எம்.பி. கனிமொழி டிவிட் செய்திருக்கிறார்.

டி.கே.எஸ் இளங்கோவன், திமுக எம்.பி. 

“வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, தற்போது 5 மாநில தேர்தல் வரும் நிலையில் அவசர அவசரமாக இந்த சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 

அவர்கள், தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிறகு பெரிய பாதிப்பை அவர்கள் ஏற்படுத்துவார்கள்” என்று, வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன், கருத்து தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

“தேர்தல் அச்சம் காரணமாக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்று உள்ளார். ஜனநாயக முறையிலான இந்த போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்து இருக்கிறது. என்றாலும், விவசாயிகளுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது” என, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், கருத்து கூறியுள்ளார்.

சு.வெங்கடேசன், எம்.பி.

“போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலு சேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல!” என்று, சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்

“என் தாய் நாட்டில் இடைவிடாது போராடும் விவசாயிகள், மன்னரை மண்டியிட வைத்து உள்ளனர்!” என்று, சற்று காட்டமாகவே நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட் செய்துள்ளார்.

ஆனால், “விவசாயிகளின் நீண்டகால பிரச்சினையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார்” என்று, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.