அரசு பெண் மருத்துவர்களுக்கு, சக மருத்துவர்களே பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் புத்தாண்டு துவங்கியதிலிருந்து கொரோனா பெருந்தொற்று வைரஸால் உலகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா முதல் அலையால் கடந்த வருடம் மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், கடந்த நவம்பருக்கு பின்னர் கொரோனா முதல் அலை சற்று குறைந்தது.

எனினும் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை தொட்டது. இந்தியா முழுவதும் பரவிய அலை தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் ஒருபுறம் நடக்க மறுபுறம் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவியது. இந்த இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் முதல் அலையைவிட அதிகமாக இருந்தது.

இரண்டாவது அலையில் கொரோனா உருமாற்றம் அடைந்து பரவியதால் இளைஞர்களிடையே இறப்பு விகிதம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா பேரிடர் நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள், மயானப் பணியாளர்களின் பணி போற்றத்தக்கதாக விளங்கியது. அதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் வீட்டுக்கே போகாமல் பணி செய்தனர். 

c1

ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிகநேரம் பணி செய்ய வேண்டிய நிலை இருந்ததால், அவர்களால் குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் வீட்டுக்கே போகாமல்  ஷிப்ட் அடிப்படையில் தனிமைப்படுத்துதலில் இருந்து மீண்டும் பணிக்கு வருவது என 4 மாதத்துக்கு மேல் பணியாற்றினர். 

இதற்காக மருத்துவர்கள் தங்க அரசே விடுதியில் அறை எடுத்து தங்க வைத்திருந்தது. அதிலும் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக சேவை செய்த மிகப்பெரிய மருத்துவமனை என்றால், அது ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை ஆகும். இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்தனர். இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றினால் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதற்காக அரசே தனியார் விடுதிகளில் தங்க வைத்திருந்தது.

இவ்வாறு சென்னை தி.நகரில் தங்க வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர் வெற்றிச் செல்வன்(35) என்பவர் தன்னுடன் பணியாற்றி அதே விடுதியில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பெண் மருத்துவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன், புகார் உறுதியான பின்னர் தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து  தி.நகர் துணை ஆணையரின் விசாரணையின் அடிப்படையில் குற்றம் உறுதியானதை அடுத்து காவல்துறையினர் மருத்துவர் வெற்றிச்செல்வனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளனர்.

c2

இதேபோல் தனிமைப்படுத்துதலில் அதே விடுதியில் தங்கியிருந்த ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் (28), அதே விடுதியில் தனிமைப்படுத்துதலில் தங்கியிருந்த அரசு பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் மருத்துவர் டீனிடம் புகார் அளித்தார். 

இதன் பேரில் அவரையும் தி.நகர் துணை ஆணையர் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து மருத்துவர் மோகன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 

 தமிழகத்தில் உள்ள அரசு பொதுமருத்துவமனைகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட மருத்துவமனையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இருந்து வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரபல மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்களே சக பெண் மருத்துவர்களிடம் இவ்வாறு நடந்துக்கொண்டு கைதானது மருத்துவமனை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.