“வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது, புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. 

இந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் திரண்ட விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராடி வருகின்றனர். 

 கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் போராட்டமானது, கிட்டதட்ட 11 மாதங்களை கடந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்னும் சில நாட்களில் ஒரு ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒராண்டிற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இது வரை மத்திய அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றும், அதில் எந்தவித சுமூக முடிவும் எட்டப்படாமல் படுதோல்வியில் முடிந்து போனது. இதனால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்ட நிலையில், இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்து வருகிறது.

எனினும், மத்திய அரசு இதுவரை துளியும் இறங்கி வராமல், விவசாயிகளின் கோாரிக்கைளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாலும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்ப பெறப்படுவதாக” பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். 

“3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது” என்றும், பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மேலும், “3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்?” என்பது குறித்தும், பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

அப்போது, “வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை என்றும், தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை” என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். 

அத்துடன், “வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என்று கருதுகிறேன் என்றும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் பிரதமர் மோடி பேசினார். 

“வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும் என்றும், குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம் பெறுவார்கள் என்றும், விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்” என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.