தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் வலம் வந்த நடிகை சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் முன்னணி மொழிகள் அனைத்திலும் கதாநாயகியாக முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சினேகாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடைசியாக தமிழில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் சினேகா நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சினேகா பண மோசடி கும்பலிடம் 25 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். 25 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1.80 லட்சம் தருவதாகக் கூறிய ஏற்றுமதி நிறுவனத்தின் நிறுவனர்களான தம்பதியிடம் சினேகா 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

பின்னர் 5 மாதங்கள் கழிந்தும், மாதம் வரவேண்டிய பங்குத் தொகை ஒரு மாதம் கூட வராத நிலையில், இது குறித்து சினேகா தரப்பு அந்நிறுவனத்திடம் கேட்க பங்குத் தொகையும் தராமல் அசலும் தராமல் ஏமாற்றியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கணத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.