ஈரோடு அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் முத்து கவுண்டன் பாளையம் பி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (20). இவரது உறவினர்களான மஞ்சு (18), தெய்வாணை, அருக்காணி, முத்துசாமி, குமரேசன், மற்றும் மோகன் ஆகியோருடன் மொடக்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் என்கிற படையப்பா (26) என்பவரின் வாடகை மாருதி ஆம்னி வேனில் அதிகாலை பழனி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் 8 பேரும் பழனியில் இருந்து மதியம் சிவகிரி அருகே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பாரப்பாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த சிமெண்ட் லாரியின் மீது வேன் நேருக்கு நேர் மோதியது. 

லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் மாருதி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஆம்னி வேனில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

p1

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி., மோகனசுந்தரம், சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 5 பேரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி அல்லது வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக ஈரோடு-கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

a2

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அருக்காணி, புவனேஸ்வரி, தேன்மொழி, தெய்வாணை மற்றும் ஓட்டுநர் படையப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் குமரேசன், முத்து மற்றும் மோகன்குமார் என்பதும் தெரியவந்ததுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.