“நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக நாங்கள் காத்திருப்போம்” என்று, விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் போராட்டமானது, கிட்டதட்ட 11 மாதங்களை கடந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்னும் 7 நாளில் ஒரு ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது.

இது வரை மத்திய அரசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றும், அதில் எந்தவித சுமூக முடிவும் எட்டப்படாமல் படுதோல்வியில் முடிந்து போனது. இதனால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே எதிர் கட்சியாகள் யாவும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர் கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்து வந்தன.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில், இன்று காலை நாட்டு மக்களிடம் காணொளி காட்சி மூலமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக” கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை என்றும், . தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை” என்றும், குறிப்பிடடார்.

“வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன் என்றும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, “விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்து இருக்கிறோம் என்றும், இதனால் கடந்த வருடத்துக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தைததையடுத்து, டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். 

அத்துடன், விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், “டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு வெற்றி” என்று, பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் தெரிவித்து உள்ளார். 

மேலும், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, “விவசாயிகளின் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக நாங்கள் காத்திருப்போம்” என்றும், விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் டிவிட் செய்திருக்கிறார்.

அதே போல், “விவசாயிகளின் பிற பிரச்சினைகளையும் மத்திய அரசு விவாதிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.