காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து ரெட் எச்சரிக்கையும் விலக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி முதல் துவங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக தமிழகத்தில் பேய் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக சென்னை மாநகரம் 13 மணிநேர இடைவெளி விடாமல் பெய்த மழையால், வெள்ளக் காடாக காட்சியளித்தது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கடந்த 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால்  கடந்த ஒரு வாரமாக மழை பெய்தவந்த நிலையில், இரண்டு நாட்கள் சற்று மழை குறைந்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும், கடந்த 13-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதையடுத்து, ஒரு சில மணி நேரங்களில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

r1

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும்  தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து இன்று அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் புதுச்சேரி-சென்னை இடையே முழுமையாக கரையை கடந்தது.

இதன் எதிரொலியால், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிகபட்சமாக புதுச்சேரியில் 19 சென்டி மீட்டர் மழையும், கடலூரில் 14 சென்டி மீட்டர் மழையும், ராணிப்பேட்டையில் 11 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை 10 சென்டி மீட்டர் மழையும், சென்னை மீனம்பாக்கம் 5 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கம் 4 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி 8 சென்டி மீட்டர் மழையும், பாலக்கோடு 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

r2

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து ரெட் அலர்ட்டும் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல்பகுதியில் மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடர்கிறது.