வேலூரில் தொடர் மழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் 4 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது தோன்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் கனமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழைக் காரணமாக கடந்த 14-ம் தேதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மலையிலிருந்து ராட்சதப் பாறை உருண்டு விழுந்ததில் அடிவாரத்தில் இருந்த ஒரு வீடு இடிந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்த தாய் ரமணி, மகள் நிஷாந்தி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதன் நினைவுகளே அகலாத நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்துள்ளச் சம்பவம் நெஞ்சை நொறுங்கச் செய்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

தொடர் மழையால் பேரணாம்பட்டு நகரில் ஓடும் கொட்டாறில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து அருகில் உள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மசூதிகளில் தஞ்சமடைந்தனர். 

c1

ஆனால் பேரணாம்பட்டு அஜிஜியா தெருவில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் சிலர் மசூதிகளில் தங்காமல் அக்கம்பக்கம் இருந்த மாடி வீடுகளில் தங்கினர். இதில், அனிஷா பேகம் (63) என்பவரது வீட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் தங்கினர். அந்த வீட்டில் சுமார் 18 பேர் தங்கினர்.

சுமார் 50 ஆண்டுகள் பழமையான அந்த வீடு இன்று காலை 6.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. தரைமட்டமான வீட்டில் 18 பேர் சிக்கிய தகவலை அடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. 

இடிபாடுகளில் சிக்கி அனிஷா பேகம், அவரின் மருமகள்கள் ரூகிநாஸ் (27), மிஸ்பா பாத்திமா (22), பேரன்கள் மன்னுல்லா (8), தாமீத் (2), பேத்திகள் அபிரா (4), அப்ரா (3), வாடகைக்குத் தங்கியிருந்த ஆசிரியைகள் கெளசர்(45), தன்ஷிலா (27) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பொக்லைன் இயந்திரம் மூலம் இடுபாடுகள் அகற்றப்பட்டு 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் இருந்து முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அஹ்மது, அபிப் ஆலம், இலியாஸ் அஹ்மது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

c2
 
இவர்களில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது. 

இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு நகருக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்த ஆட்சியர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆட்சியரை முற்றுகையிட்டு ‘கொட்டாறு தூர் வாராததால் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து வெளியேறாமல் இருக்கிறது. ஆற்றைத் தூர்வார வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்கால நிவாரண முகாம்கள் கூட ஏற்படுத்தவில்லை. தரைக்காடு பகுதியில் வி.கோட்ட சாலையும் பள்ளமாக அமைத்ததால் வெள்ள நீர் வெளியேறாமல் வீடுகளில் புகுந்துள்ளது. 

நகரில் உள்ள வார்டுகளை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அவர்களை சமாதானம் செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மழைச் சேத பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் இறந்த சம்பவம் நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

c3

இந்நிலையில், வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் கனமழையால் வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, நான்கு குழந்தைகளும், ஐந்து பெண்களும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.