தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

“ஒரு பிளாஸ்டிக் பைகள் என்னவெல்லாம் கேடு விளைவிக்கும்? என்று கேட்டால், சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதுடன், கொட்டி தீர்க்கும் கனமழைகளை பூமிக்குள் நேரடியாக அனுப்பாமல், சமீபத்தில் சென்னையில் தேங்கி நின்றதைப் போலவே தீங்கு மட்டுமே செய்யும்” என்பதே உண்மை.

முக்கியமாக, தமிழகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக அகற்ற வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட்-பை சொல்ல வேண்டும் என்பதில் உறுதியேற்று உள்ளது.

அதாவது, ஒரு பிளாஸ்டிக் பை சாதாரணமாக பொது மக்களால் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 

ஆனால், இதே பிளாஸ்டிக் பைகள் இந்த மண்ணில் மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் என்பது பல நூறு ஆண்டுகள் என்றும், கூறப்படுகிறது.

இன்றைய அவசரக் காலத்தில், மனிதன் தனது சுயநலத்திற்காக அளவுக்கு அதிகப்படியாகப் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நாம் வாழும் இந்த அழகான பூமியும் சரி, பூமியில் உள்ள நீர் மட்டங்களும் வெகுவாகவே பாதிப்படைந்து காணப்படுகின்றன.

இவற்றுடன், கடல் வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் ஏற்படுத்துகிறது என்று, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் பொது மக்கள் ஒரு முறை மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், அவற்றின் தேவையும் அதிகரித்துள்ளதால், அதன் கழிவுகளும் நாளுக்கு நாள் டன் கணக்கில் அதிகரித்து, நமது பூமியையே நாசம் செய்துவிடுகிறது. 

இதனால், இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து மிக கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

ஆனாலும், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, இவற்றையெல்லாம் தொடர்ந்து அமல்படுத்துவதில் சில தேக்கங்கள் காணப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் தான், தற்போது தமிழக அரசு இந்த தடையை எல்லாம் தகர்த்தியுள்ள நிலையில், “தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட்-பை சொல்லும் விதமாகவும் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையிலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையைத் தமிழக அரசு இன்று இயக்கமாகத் தொடங்குகிறது.

“மீண்டும் மஞ்சப்பை” பரப்புரை நிகழ்ச்சியைச் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, இந்த நிகழ்ச்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார். இதில், மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சியானது, பொது மக்களின் பார்வைக்காகச் சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவானர் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம் அளிக்கப்படும்” என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.