திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏற்பட்ட விபத்தில் 7 கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது.
திருச்சியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான காந்தி மார்க்கெட் உள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த பகுதியில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுகிறது. இந்த மார்க்கெட்டுக்கு வெளியே அதன் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான டீக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக் கடை உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது. இன்று காலை திருச்சி மாநகரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மொத்தம் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் காய்கறிகள் வாங்க வந்தனர்.
இந்நிலையில் முதல் கேட் அருகே திருச்சி தாராநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அரியமங்கலத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் பலகார மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அதிகாலை கடையை ஆறுமுகம் திறந்ததும் மாஸ்டர் பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மாற்று சிலிண்டரை பொருத்த பரமசிவம் தயாரானார்.
அதனைத்தொடர்ந்து அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் குபீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. தண்ணீரை ஊற்றி அணைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த பகுதியில் காற்று சற்று பலமாக வீசியதால் தீயானது வேகமாக பரவியது. இதில் டீக்கடை முழுவதும் பற்றி எரிந்தது. இதில் பலகார மாஸ்டர் ஆறுமுகத்திற்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்தை அருகில் நின்ற பார்த்துக்கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர் அல்போன்ஸ் என்பவர் மயங்கி விழுந்தார்.
மேலும் இதற்கிடையே டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. இதில் அருகில் இருந்த தேங்காய் கடை, இனிப்பு மிட்டாய் கடை, பாதாம் பால் கடை, பெட்டிக்கடை, எலக்ட்ரிக் கடை, மளிகை கடைகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. பூட்டப்பட்டிருந்த அந்த கடைகளில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியான புகை அந்த பகுதியையே புகை மண்டலமாக மாற்றியது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்க்கியூராஜ், உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்கள் வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடியும் தீயானது கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் இதற்கிடையே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மாநகராட்சி சார்பில் 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மேலும் தீ தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில் 7 கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. அதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு வந்து பொதுமக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருந்தால் உயிர் பலியுடன் சேதமும் அதிகரித்து இருக்கும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை காந்தி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.