“மஞ்சள் பையை வைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகும் மனநிலையை பொது மக்கள் அனைவரும் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடுகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், கொட்டி தீர்க்கும் கனமழைகளைப் பூமிக்குள் நேரடியாக அனுப்பாமல், சமீபத்தில் சென்னையில் தேங்கி நின்றதைப் போலவே பொது மக்களுக்குத் தொடர்ந்து தீங்கு மட்டுமே செய்வதாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முக்கியமாக, தமிழகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக அகற்ற வேண்டும் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு குட்-பை சொல்ல வேண்டும் என்பதில் உறுதியேற்று இருக்கிறது.

முக்கியமாக, பிளாஸ்டிக் பைகள் இந்த மண்ணில் மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் என்பது பல நூறு ஆண்டுகள் என்று கூறப்படுவதால், இதனால் இயற்கை சூழல் எல்லாம் மாசுப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்ட தமிழக அரசு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அதன் படி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மஞ்சள் பை இயக்கத்தைச் சென்னை கலைவாணர் அரங்கத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சற்று முன்பாக தொடங்கி வைத்தார். 

அத்துடன், தமிழக மக்கள், துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில், மீண்டும் மஞ்சள் பை இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையையும், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.

பொது மக்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச் சூழல் முழுவதுமாக மாசுபாட்டு நமது பூமி இன்னும் தீவிரமாகப் பாதிப்படைந்து உள்ளதாகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு மிக கடுமையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தற்போது எடுத்து உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் “பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வுகளையும், அதற்கு மாற்றான துணிப் பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொது மக்கள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் மஞ்சள் பை பரப்புரையைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சள் பை பரப்புரைக்கான நிகழ்ச்சியானது, சென்னை கலைவாணர் அரங்கத்தில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, தமிழக மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுற்றுச்சூழல் பிரச்சினைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை” என்று, சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது” என்றும், பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், “பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கத் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதை நிறைவேற்ற முடியாது என்றும், மக்களும் நினைத்தால் தான் இதை முழுமையாகத் தடை செய்ய முடியும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்பாக, “மஞ்சப்பை என்பது அவமானமல்ல, அது சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையோடு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இதர அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்றைய தினம் சைக்கிளில் அலுவலகம் வந்தது குறிப்பிடத்தக்கது.