பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் என்ற வார்த்தையை நீக்கி கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பொங்கல் ரொக்கப்பணம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தநிலையில் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது.

தமிழகத்தில் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத்தொகை அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த சூழலில் தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

pongal gift

 இதற்கான முன்னேற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். 

அதில் “பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய ஏதுவாக அனைத்து பொருட்களும் ரேஷன் கடைகளுக்கு முன்னதாக அனுப்பப்பட வேண்டும். ஒரே தவணையில் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும். 

ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். விற்பனை முனைய கருவிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்களின் விநியோகத்திற்கு வாகனங்களும், சுமை தூக்கும் ஊழியர்களும் போதிய அளவில் இருக்க வேண்டும். 

ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப கூடுதல் ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலரை நியமித்து, எவ்வித புகாரும் இன்றி விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். 

ஆயிரம் கார்டுகள் வரை உள்ள கடைகளில் இரண்டு ஊழியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள கடைகளில் மூன்று ஊழியர்களும் பணியில் ஈடுபட வேண்டும்.

பரிசுத் தொகுப்பை சிறப்பான முறையில் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர், வாணிப கழக மண்டல மேலாளர், வேளாண் துறை இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் என்ற வார்த்தையை நீக்கி கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது வந்துள்ள புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. 

pongal gift

முன்னதாக வெளியான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

“வரும் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் (பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில்) வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பழுப்புநிற காகித உறைகளில் பொட்டலமிட்டு வைத்திருக்க வேண்டும். பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் அளவில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என்று ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது. பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான தினசரி அறிக்கை பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். 

இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைத்து, பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு, துணைப்பதிவாளர் நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ஆகியவை ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.