பெரியாரின் 48-வது நினைவுதினத்தையொட்டி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

MKSTALIN

பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.  இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.

ஈவெரா என்ற பெயரை தமிழகத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும்,  மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஈவெ ராமசாமி. இவருடைய சுயமரியாதை கொள்கைகள், பகுத்தறிவு தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. ஈவெ ராமசாமி,  ஈவெரா, தந்தை பெரியார் ,வைக்கம் வீரர் என பல பட்டங்களால் அழைக்கப்பெறும் இவர் பெண் விடுதலைக்காக போராடியவர்.

வசதியான முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தும்,  சாதிக் கொடுமை , தீண்டாமை , மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் பெரியார். தற்போதைய நவீன சிந்தனைகளை அன்றே தீர்க்கதரிசி போல மக்களிடையே எடுத்துரைத்தவர் பெரியார். சமுதாயத்தில் சாதி முறையையும்,  இழி நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த பெரியார்,  தனது 94-ம் வயதில் 1973-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24-ம் தேதி இயற்கை எய்தினார். பெரியார் மறைந்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆனபிறகும் அவரின் கொள்கைகளும், அவரின் கோட்பாடுகளும், அவரின் முழக்கங்களும் இன்றளவும் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறார்கள் என்றால் அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனையாளர் பெரியார் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம் இன்று  தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தந்தைப் பெரியாரின் 48 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் மாலை அணிவித்து பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.