தமிழகத்தில் 1ல் இருந்து 34 ஆக ஒமைக்ரான் பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிலேயே அதிகம் ஒமைக்ரான் பாதித்த மாநில பட்டியலில் தமிழகம் 3 வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு சற்று வேகமாகவே பரவி வருகிறது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரசானது, உலகின் சுமார் 105 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தற்போது வரை பரவி உள்ளது. இதனால், உலக மக்கள் பலரும் கடும் பீதியடைந்து உள்ளனர்.

அதே போல், இங்கிலாந்து உள்ளிட்ட சில முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று வைரசானது, பரவத் தொடங்கி உள்ளது.

இதனால், ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டு இருக்கும் நாடுகளில் இருந்து, இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை முற்றிலுமாக கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி இந்த ஒமைக்ரான் தொற்று வைரசானது உள் நுழைந்தது. அன்றைய தினம் 2 பேருக்கு கர்நாடக மாநிலத்தில் இந்த தொற்று பதிவானது. 

ஆனால், தற்போது இது, இந்தியாவின் 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவிக்கொண்டு இருக்கிறது.

முக்கியமாக, இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 236 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. 

அதே நேரத்தில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசின் தாக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையான தற்போது 34 ஆக அதிகரித்து உள்ளதாகவும்” கூறியுள்ளார்.

அத்துடன், “12 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இதில் 18,129 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்றும், 57 பேரில் 34 பேர் முடிவு தெரிய வந்துள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

அதில் 23 பேருக்கு மாதிரிகள் இன்னும் முடிவுகள் வர வேண்டி உள்ளது என்றும், 33 பேரில் 2 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மற்ற 31 பேரும் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்” என்றும், அவர் கூறினார்.

“ஒமைக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர் என்றும், ஒருவர் மட்டும் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள்” என்றும், அவர் தெரிவித்தார்.

“ஒமைக்ரான் உறுதியாகி உள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள் தான் உள்ளன என்றும், தலைச் சுற்றல் போன்ற சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே அவர்களுக்கு உள்ளது என்றும், இதனால் கவலைப்படத் தேவையில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் சிகிச்சையில் இருக்கின்றனர் என்றும், விமான நிலையங்களில் கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றும், குறிப்பிட்டார்.

குறிப்பாக, “சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனிடையே, மராட்டியத்தில் 65 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 64 பேருக்கும், இதனையடுத்து தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3 வது இடம் பிடித்திருப்பது, தமிழக மக்களைச் சற்று அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.