முகேஷ் அம்பானியின் குஜராத் பங்களாவை அலங்கரிக்க ஆந்திராவில் உள்ள தோட்டக்கலை வளர்ப்பு மையம் ஒன்று 200 ஆண்டுகள் பழமையான இரண்டு ஆலிவ் மரங்களை அனுப்பியுள்ளது.

உலகின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆடம்பர பங்களா ஒன்று கட்டிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு மிருகசாலை ஒன்றையும், முகேஷ் அம்பானி உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மிருகக்காட்சி சாலையை அலங்கரிக்க பழமையான 2 ஆலிவ் மரங்கள் வைத்து வளர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டு கடியத்தில் உள்ள கவுதமி நர்சரி என்ற தோட்டக்கலை வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட 2 ஆலிவ் மரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 

Ambani Olive trees

இந்த ஆலிவ் மரங்களில் ஒன்று 170 ஆண்டு பழமையானது என்றும், மற்றொன்று 200 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது. நவம்பர் 24 ஆம் தேதி அன்று, ஒரு ட்ரக்கில் ஏற்றப்பட்டு 5 நாள் பயணமாக குஜராத்திற்கு இந்த இரண்டு ஆலிவ் மரங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. 

இரண்டு ஆலிவ் மரங்களுக்காக தொழிலதிபர் முகேஷ் அம்பானி போக்குவரத்து உட்பட சுமார் 85 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய கவுதமி நர்சரியின் உரிமையாளர் வீரபாபு, “ இந்த ஆலிவ் மரங்கள் ஒவ்வொன்றும் 2 டன் எடையுள்ளவை. இதன் வேர்கள் பூமியில் படர்ந்துள்ளன. தற்போது அவை பாலிதீன் கவர்களால் நன்றாக மூடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. 

ட்ரக்கில் இந்த மரங்களை ஏற்றுவதற்கு 25 பேர் கொண்ட குழு மற்றும் ஹைட்ராலிக் கிரேன்கள் தேவைப்பட்டன. மரங்களின் அதிக எடை மற்றும் உடையக்கூடிய தன்மை காரணமாக இந்த ட்ரக் வாகனம் மணிக்கு 30- 40 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும், எனவே இது ஜாம்நகரை அடைய சுமார் 5 நாட்கள் ஆகும்.

Ambani Olive trees

முகேஷ் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஒரு மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார். மேலும் ஒரு முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறார். அவர்கள் தங்கள் சேகரிப்பில் சேர்க்க பல இனங்களைச் சேர்ந்த அரிய மரங்களைச் சேகரித்து வருகின்றனர். புனிதமாக கருதப்படும் ஆலிவ் மரம் செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது, இந்த மரம் 1000 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது" என்று கூறியுள்ளார்.

இரண்டு ஆலிவ் மரங்களுடன் மேலும் சில மரங்களையும், கவுதமி நர்சரி இன்னொரு ட்ரங்கில் முகேஷ் அம்பானிக்காக அனுப்பியுள்ளது. கவுதமி நர்சரி நாடு முழுவதும் ரெசார்ட்டுகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றம் கார்ப்பரேட் கம்பெனிகளக்கு, விலையுயர்ந்த மரங்களை அனுப்பி வருகின்றது குறிப்பிடத்தக்கது. .