கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்டான  2020ல், இந்தியாவிலிருந்து புதிதாக 40 பேர்  'பில்லியனர்ஸ்' பட்டியலில் இணைந்துள்ளனர். 


இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹுருன் நிறுவனம் முன்னமே  தெரிவித்திருந்தது. தற்போது மேலும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஹுருன்  நிறுவனம். 


அதில் இந்தியாவில் கடந்த ஆண்டில் புதிதாக  40 பேர், 7,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ள 'பில்லியனர்ஸ்' பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த பட்டியலில் 7,300 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 177 பேர் இருக்கிறார்கள். இதில் 60 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் டெல்லியில், 40 நபர்களும் பெங்களூருவில், 22 நபர்களும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்தியாவில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் பணக்காரராக இருக்கிறார். முகேஷின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, இரு மடங்காக அதிகரித்து,  இந்தியாவின், இரண்டாவது பெரும் பணக்காரராக உள்ளார். மூன்றாவது இடத்தை தகவல் தொழிற்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் இடம்பெற்றுள்ளார். 


பேரிடர் காலத்திலும் தனிநபர் மற்றும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு வளர்ச்சி அடைந்துள்ள போதிலும்  இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.