சினிமா சூட்டிங் நடத்தலாம், கிரிக்கெட் விளையாடலாம், ஆனால் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் தடை?” என்று, மாநில அரசுக்கு அம்பானியின் மகன் கேள்வி எழுப்பி உள்ளது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே போல், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது இது வரை இல்லாத அளவிற்குத் தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதே போல், தமிழகம் உட்பட மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது மீண்டும் வேகமெடுத்து வருகிறது. 

இதனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ்ன் 2 வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளதுடன், பல அதிரடியான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. 

இது தொடர்பான கருத்துக்களும் அங்கு தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் 29 வயதான அன்மோல் அம்பானி, தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் 29 வயதாகும் அன்மோல் அம்பானி, மிகவும் செல்வாக்கு மற்றும் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் இது வரை ஊடக வெளிச்சம் தன் மீது படாத அளவுக்கு எப்போதும் அவர் ஒதுங்கியே இருந்து வந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளதால், பல்வேறு கட்டுபாடுகள் அங்கு அதிரடியாகவும் தொடர்ச்சியாகவும் விதிக்கப்பட்டு வருகின்றன. 

அத்துடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கும் கடுமையாக  அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அன்மோல் அம்பானி, மிக கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதன்படி, “நடிகர்கள் இரவு நேரங்களில் சினிமா சூட்டிங் நடத்தலாம். கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம். அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தலாம். ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களை செய்யவும், தொழிலாளர்கள் தங்களது வேலையை செய்ய மட்டும் கூடாதா?” என்று, அன்மோல் அம்பானி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அது போல், கடந்த ஜனவரி மாதத்தில், “கொரோனா என்பது இன்றைய புதிய மத வழிபாட்டு முறை ஆகிவிட்டது” என்று, அன்மோல் அம்பானி அப்போது காட்டமாக பதிவிட்டு இருந்தார். தற்போது, அதன் தொடர்ச்சியாக, கொரோனா ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் குறித்து அன்மோல் அம்பானி தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.