அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் பாஜகவை, “பாஜக ஒரு வளராத கட்சி” என்று, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளது தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

தமிழக அரசியல் சற்று வித்தியாசமானது. அதுவும், ஜெயலலிதா மறைவு மற்றும் சசிகலா பிரிவுக்குப் பிறகு அதிமுகவின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

அதாவது, அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும், அந்த அதிமுகவிற்கு எதிராக பாஜக தனது அஸ்திரத்தை எடுக்கும். இதற்கு, அதிமுக தலைமை எந்த எதிர்வினையும் ஆற்றாது. 

இது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைமையை கேட்டால், “அது கருத்து சொன்னவரின் தனிப்பட்ட கருத்து” என்று முடித்துக்கொள்வார்கள். 

அதுவும், “ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு, அதே கூட்டணிக் கட்சியை விமர்சிக்கும் தன்னம்பிக்கையும், திறமையும் பாஜகவிற்கு மட்டுமே உண்டு” என்று வடிவேலு பாணியில் தான், தமிழ்நாட்டில் அதிமுகவின் கூட்டணி நிலையானது, கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போது அதிமுக ஆளும் கட்சியாக இல்லாமல் இருந்தாலும், பாஜகவின் எதிர்மறையான விமர்சனங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தான், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் “நாங்கள் தான் பிரதான எதிர்க் கட்சி” என்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். 

இதனால், “தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதும், அமைச்சர்களைத் தேவையில்லாமல் சீண்டுவதும் தான் எதிர்க்கட்சியா?” என்று, திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும், “திமுக அரசு மீது குறை சொல்லியே தீர வேண்டுமென்பதாலும், அதிமுகவை ஓரங்கட்டவும் இப்படி பேசி வருகிறார் அண்ணாமலை” என, தமிழகத்தில் ஒரு சில அதிமுக அனுதாபிகளே தற்போது கருத்து கூற தொடங்கி உள்ளனர். 

இந்த சூழலில் தான், “திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் எதிர்க் கட்சித் தலைவர்” என வைக்கப்பட்டு உள்ள கல்வெட்டால் தமிழகத்தில் புதிய சர்ச்சையே வெடித்திருக்கிறது. 

அதாவது, அந்த புதிய கட்டட அலுவலகத்தில் பதிப்பதற்காகக் கொண்டு வந்திருந்த கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்குக் கீழ் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்கிறோம் அந்த கட்சியினரால் தேர்ந்தெடுப்பவரே எதிர்க் கட்சித் தலைவர் ஆவார். 

அப்படிப் பார்க்கும் போது, அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி தான் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தற்போது இருந்து வருகிறார். 

ஆனால், பாஜகவின் புதிதாகக் கொண்டு வந்த கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதுவும், நயினார் நாகேந்திரன் பாஜக சட்டப்பேரவை தலைவராகவே மட்டுமே இருக்கிறார். இது தவிர, அவர் எதிர்க் கட்சித் தலைவராகக் கருதப்பட மாட்டார்.

இது குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்தில், “தமிழ்நாட்டில் பாஜக ஒரு வளராத கட்சி. ஆனால், அதிமுக வளர்ந்த கட்சி” என்று, விமர்சித்து உள்ளார்.

மேலும், “பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்கள் இது போன்று போட்டுக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் மக்களின் பேராதரவுடன் அதிமுக தான் எதிர்க் கட்சியாக இருக்கிறது” என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.