“பள்ளிக் கூடத்தில் பென்சிலை சக மாணவன் திருடியதற்காக, சம்மந்தப்பட்ட மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து 1 ஆம் வகுப்பு சிறுவன் புகார் அளித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த ஹனுமந்த் என்ற சிறுவன், அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த சூழலில் தான் 1 ஆம் வகுப்பு மாணவன் ஹமந்த் மற்றும் அவனுடன் வேறு சில 3 சிறுவர்கள் என்று மொத்தம் 4 சிறுவர்கள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்.

சின்னஞ்சிறு சிறுவர்கள் 4 பேர்ந்து காவல் நிலையத்திற்குள் வருவதைப் பார்த்த அங்கிருந்த போலீசார்கள், அவர்களை வரவேற்று “ஏன் இங்கு வந்திருக்கிங்க?” என்று விசாரித்து உள்ளனர். 

அப்போது, சிறுவன் ஹனுமந்த், தான் அழைத்துச் சென்றிருந்த 3 மாணவர்களில் ஒரு மாணவனை காட்டி, “சார், இவன் என்னுடைய பென்சிலை திருடி விட்டான். அதான் இங்க கூட்டி வந்தேன். அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்” என்று, புகாராக சொல்லியிருக்கிறான். 

ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் இந்த குற்றச்சாட்டை கேட்டு கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த போலீசார், அந்த மாணவனை சிரித்த முகத்தோடு அணுகி, புகார் கூறிய மாணவனை சமாதானம் செய்து முயன்றனர்.

ஆனால், சிறுவன் ஹனுமந்த், “என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று, விடப்பிடியாக அடம் பிடித்திருக்கிறான். 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த போலீசார், “அப்படி, வழக்கு பதிவு செய்தால், நீங்களும் இருவரும், உங்களது பெற்றோரும் நீதிமன்றம், ஜாமீன் என்று தினம் தினம் அலைய நேரிடும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “தேவைப்பட்டால் அந்த மாணவனுடைய பெற்றோர்களிடம் இது பற்றி கூறி, இந்த மாணவனை கண்டிக்க சொல்கிறேன்” என்று, சிறுவன் ஹனுமந்த்திடம் போலீசாரிடம் பக்குவமாக எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சம்மந்தப்பட்ட மாணவர்களை சமாதானம் செய்த போலீசார், “திருடிய பென்சிலை காண்பிக்கும் படி” கேட்டு உள்ளனர்.

அப்போது, சிறுவன் ஹனுமந்த், ஒன்றரை அங்குலம் உள்ள ஒரு குட்டி பென்சில் துண்டை போலீசாரிடம் காட்டியிருக்கிறான். 

இந்த பென்சிலை பார்த்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க அவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் சற்றும் அசாரத அந்த சிறுவன், “இந்தப் பென்சிலை தான், இவன் திருடி விட்டான்” என்று, மீண்டும் கூறியிருக்கிறான்.

இதனைக் கேட்டு போலீசார் சிரித்துக்கொண்டே, சிறுவர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், கடைசியாக புகார் கொடுத்த சிறுவனையும்,பென்சில் திருடிய சிறுவனையும் ஒன்றாக கைகுலுக்கச் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, பள்ளி மாணவர்கள் அதுவும் 1 ஆம் வகுப்பு மாணவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ள சம்பவம், வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.