பாசியால் வாடிக்கொண்டிருந்த ஆட்டுக் குட்டிக்கு மிகுந்த பாசத்துடன் நாய் ஒன்று பாலூட்டிய நிகழ்வு, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

“பாசம் வைக்க உயிரின பாகுபாடு இல்லை” என்பதைப் பறைசாற்றும் விதமாக நடந்திருக்கும் இந்த விநோத சம்பவம், தமிழ்நாட்டில் அதுவும் ஆரணி அருகே அரங்கேறி இருக்கிறது.

ஆம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சந்தவாசல் படவேடு சாலையில் இருக்கும் காட்ரோடு பகுதியில், மல்லிகா லஷ்மி என்ற பெண் வசித்து வருகிறார். 

இந்த பெண், தினமும் விவசாய வேலைக்குச் சென்று வரும் நிலையில், தனது வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். அத்துடன், கூடவே நாய் ஒன்றையும் அவர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான், வீட்டில் வளர்த்து வந்த நாயும், ஆடும் ஒரே சமயத்தில் குட்டிகளை ஈன்றிருக்கிறது. 

அதுவும், வீட்டில் ஒரு புறத்தில் ஆடு தனது குட்டியோடும், மறுபுறத்தில் நாய் தனது குட்டிகளோடும் இருந்து வந்திருக்கிறது.

இந்த சூழலில் தான், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொட்டி தீர்த்து வரும் கன மழை காரணம் உட்பட தாய் ஆடானது, தனது குட்டிகளுக்குச் சரிவரப் பால் கொடுக்காமல் இருந்து வந்திருக்கிறது.

இதனால், அந்த குட்டி ஆடு பசியால் துடிதுடித்திருக்கிறது. அத்துடன், அந்த குட்டி ஆடானது பசியால் தாய் ஆட்டை சுற்றிச் சுற்றி வந்து பால் குடிக்க முற்பட்ட நிலையிலும், அந்த ஆட்டுக் குட்டி பால் கிடைக்காமல் பசியால் முற்றிலுமாக வாடியிருக்கிறது.

இதைப் பார்த்த அருகில் இருந்த தாய் நாய் ஒன்று, தன்னுடைய குட்டிகளுக்கு எப்படிப் பால் கொடுக்குமோ அதே முறையில் அப்படியே அந்த ஆட்டு குட்டிக்கும் பால் கொடுத்திருக்கிறது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நாயை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் இதனை வீடியோவைவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதே போல், கோவை மதுக்கரை அருகே கேரளாவில் இருந்து வந்த ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மொத்தம் 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.