திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனராகவும் திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தனது KH-ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்கு அமெரிக்காவில் உள்ள சிக்காகோவிற்கு பயணம் மேற்கொண்டார். 

அமெரிக்கா பயணம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசனுக்கு லேசான இருமல் தொந்தரவு இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 26 ஆம் தேதி) கமல்ஹாசனின் தற்போதைய உடல் நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் கமல்ஹாசன் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் தேறி வருவதாகவும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் எனவே விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.