தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2008-ம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் 2010-ம் ஆண்டு ஈசன் எனும் படத்தை இயக்கினார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய அனைத்து படங்களும் ஹிட். கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதன் பின் தனுஷ் உடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். 

சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். 

மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.

ராஜவம்சம் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மானே உன்ன, மாப்பிள்ள வந்தா ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. இந்நிலையில் படத்தின் சென்சார் தகவல் வெளியானது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. இதனால் நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறலாம். அமேசான் ப்ரைமில் வெளியாகவிருக்கும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கும் U சான்றிதழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. இந்த படத்திற்கும் U சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார் சசிகுமார். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. பல ஆண்டுகள் கடந்தாலும், இப்படத்தில் இடம்பெற்ற முருங்கக்காய் வசனம், இன்று வரை ட்ரெண்டில் உள்ளது.