2021 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

விவசாயிகள் போராட்டம் சாதனையா? வேதனையா?

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் போராட்டமானது, கிட்டதட்ட ஒரு வருடங்களை நிறைவு செய்ய இன்னும் சில நாட்களே இருந்த போது, கடந்த நவம்பர் 19 ஆம் தேதி “மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்” என்று, அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலமாக நடந்த இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிய நிலையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். பல உயிர்களை இழந்து விவசாயிகளுக்கு இந்த போராட்டம் வெற்றியைத் தேடி தந்திருக்கிறது.

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற மத்திய அமைச்சரின் மகன்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், “விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றது திட்டமிட்ட சதி!” லகிம்பூர் கேரி சம்பவம் பற்றி விசாரணைக்கு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2021 குடியரசு தினத்தில் வன்முறை

அதாவது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று, தலைநகர் டெல்லியின் முக்கிய வீதிகளில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டக்காரர்கள் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்து, போலீசாருடன் சண்டையிட்டு, வாகனங்களை கவிழ்த்து பெரிய களேபரத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இதில் பெரிய வன்முறையே வெடித்தது. அதுவும், டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியை ஏற்றினர். 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அமைதியாக போராடி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், டெல்லியின் பல இடங்களில் போலீசாருடன் மோதினர் என்றும், கூறப்பட்டது. இது டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கலவரம் மற்றும் கடும் குழப்பத்திற்கு வழிவகுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

கடந்த ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2 வது அலையாக பரவிக்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதுவும், கொரோனா 2 ஆம் அலை முந்தைய அலையைவிட, மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்பத்தியது. சிகிச்சைக்கான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சுடுகாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது. 

அப்போது, இந்திய சுகாதார கட்டமைப்பு வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையுடன் லட்சக்கணக்கான தொற்று பாதித்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. குறிப்பாக, டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அப்போது, “கொரோனா 2 ஆம் அலையை மத்திய அரசு எப்படி எதிர்கொள்கிறது?” என்பதனை அறிக்கையாக அளிக்கும் படி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகே, தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகள் நூறு கோடி என்னும் இமாலய எண்ணிக்கையைக் கடந்து செலுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

மேற்குவங்க தேர்தலும்.. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையும்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில் திரிணமூல் கட்சியானது, மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை வெடித்தது. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.  மாநிலம் முழுவதும் கொலை, மற்றும் பலாத்கார சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டின. இந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சரியாக செயல்படாத மேற்கு வங்க அரசுக்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. என்றாலும், மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

இன்னொரு பக்கம், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது. கேரள மாநிலத்தில், பினராயி விஜயன் 2 வது முறையாக முதலமைச்சராக பெறுப்பேற்றுக்கொண்டார்.

பாண்டோரா பேப்பர்ஸ் லீக்

சட்டத்திற்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சட்டத்திற்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக கூறியது.
 
அதுவும், இந்தியா உட்பட 91 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அதிகாரிகளின் நிதி ரகசியங்களை பாண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது. லீக்கான பாண்டோரா பேப்பர்ஸில் 300 க்கும் மேற்பட்ட இந்தியப் பெயர்கள் உள்ளன. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் முக்கியமான நபர்கள். சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நீரவ் மோடி, ஜாக்கி ஷெராஃப், அஜித் கெர்கர் மற்றும் கிரண் மசூம்தார் ஷா உட்பட பலரின் பெயர்கள் இதில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.