இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. அந்த சமயத்தில் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெருந்தொற்று பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. சமீபகாலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்தது.

covid 3rd wave in indiaஇந்நிலையில் கொரோனா வைரஸின் புதிய வகையான ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 781 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா பரவலும் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட் 19 இந்தியா டிராக்கர் மென்பொருள் மூலமாக இது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பால் கட்டுமேன் கூறும்போது, “இந்தியாவில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும். அடுத்த சில நாட்களில் இந்தியாவில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரிக்கும். புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரிக்கும். 

இந்த வாரத்திலேயே அது நடக்கலாம். ஆனால் தினசரி பாதிப்பு எந்த எண்ணிக்கையில் இருக்கும் என இப்போது கூறுவது கடினம். ஒரே ஆறுதல் இரண்டாவது அலையைப் போல், மூன்றாவது அலையில் பாதிப்பு நீண்ட காலம் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 

“அடுத்த சில நாட்களில் அல்லது ஒரு வாரத்திற்குள்ளாக இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கும். அங்கு 6 மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 24 ஆம் தேதி நிலவரப்படி புதிதாக பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவீதமாக இருந்தது. 

covid 3rd wave in indiaஆனால் இரண்டே நாட்களில் மேலும் 11 மாநிலங்களில் இந்த ஒமிக்ரான் பரவல் விகிதம் கண்டறியப்பட்டு உள்ளது.  இதற்கு மக்கள் தொகை நெருக்கமாக இருப்பது முக்கிய காரணம். முதலில் கடுமையாக அதிகரித்து பின்னர் படிப்படியாக பாதிப்புகள் குறையத் தொடங்கும்.

பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு, ஒமிக்ரானிடமிருந்து மனித சமூக காப்பாற்றப்படும். பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது நிலைமையை இன்னும் ஆபத்தாக மாற்றும். எனவே இந்த விஷயத்தில் அதிக கவனத்துடனும், பொறுப்புடனும் மக்களும், அரசும் செயல்பட வேண்டும்” இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் நடத்திய ஆய்வில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மூன்றாவது அலையில் தாக்கம் உச்சமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.