இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இந்தியாவிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரைன் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலும் அதிவேகத்தில் 27 நாட்களில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது. 

இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 8 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

mamataஅதில் கொரோனா பரவி வரும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்திருந்தார். 

அதன்படி “மும்பை, புனே, பெங்களூர், குருகிராமம், அகமதாபாத், சென்னை, நாசிக் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர். 

எனவே மாநில அரசுகள் தேவைப்பட்டால் சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம்” என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்று மேற்கு வங்க  முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவுக்கு சென்றபோது  முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் மீண்டும் அனைத்து இடங்களிலும் கொரோனா  கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. கட்டுப்பாடுகள் விதித்தால் கடந்த 2 ஆண்டை போல பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்.

mamataகொரோனா அதிகரிக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொல்கத்தாவில் இதுவரை பதிவாகியுள்ள ஒமிக்ரான் தொற்று அனைத்தும் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஒமிக்ரான் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

இது மேற்குவங்காளத்தில் ஒமிக்ரான் வேகமாக பரவ வழிவகுக்கும் என்பதால் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்குவங்காள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.