இன்றுடன் நம்மை விட்டு விடைபெறுகிறது 2021. இந்த தருணத்தில் 2021 ஆம் ஆண்டை நாம் ஒரு முறை திரும்பி பார்க்கலாம்.

ஜனவரி 19, கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமுார் 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மற்றுமு் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்த முதல் நாளாக அமைந்தது.

ஜனவரி 27, சென்னை மெரினா கடற்கரையில் ரூ.79.75 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜனவரி 27, சொத்துக்குவிப்பு வழக்கில்  கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா விடுதலை ஆனார்.

ஜனவரி 28, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நினைவு இல்லமாக திறந்து வைத்தார்.

பிப்ரவரி 5, கூட்டுறவு வங்கியில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பிப்ரவரி 7, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் நெருக்கம் காட்டி வந்த சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சென்னையில் உள்ள சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. 

பிப்ரவரி 12, தமிழ்நாட்டில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களின் வாரிசுகள், தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தாய் அல்லது தந்தையின் சாதி

பிப்ரவரி 12, விருதுநகர் மாவட்டம் அச்சன் குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கர்ப்பிணி உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 16, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம்.

பிப்ரவரி 16, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை சௌந்தராராஜனுக்கு, புதுசசேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டது.

பிப்ரவரி 18, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து அதன் பின்னர் அங்குள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்து வந்த சசிகலா  தமிழகம் திரும்பினார்.

பிப்ரவரி 22, புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

பிப்ரவரி 25, புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலானது.

பிப்ரவரி 25, தமிழ் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சியடைந்ததாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மார்ச் 3, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மார்ச் 6, 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியுடன் மீண்டும் கைகோர்த்த மதிமுக,  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது.

மார்ச் 19, 7 சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப் பெயரில் அழைக்க வகை செய்யும் திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 26,  “கள்ள உறவில் பிறந்த குறை பிரசவ குழந்தை ஈபிஎஸ்” என்று, திமுக எம்.பி. ஆ.ராசா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மார்ச் 29, “கள்ள உறவில் பிறந்த குறை பிரசவ குழந்தை ஈபிஎஸ்” என்று விமர்சம் செய்து பேசியதற்காக, திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டார்.

ஏப்ரல் 6, தமிழ்நாட்டின் 16 வது சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. 

மே 2, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. 

மே 2, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

மே 7, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

மே 7, மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வின்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று, அவர் கூறிய போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, உணர்ச்சி பெருக்கால் அழுதார்.

மே 9, சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டார்.

மே 21, தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக பட்சமாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மே 29, கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புநிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஜூன் 1, தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 
ஜூன் 5, கொரோனா பெருந்தொற்று காரமாக, தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஜூன் 20, துணை நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஜூன் 30, தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார்.

ஜூலை 8, தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.

ஜூலை 12, “எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை” என்று, அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், “ரஜினி மக்கள் மன்றத்தை” கலைத்தார்.

ஜூலை 19, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விண்ணிப்பித்த அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஜூலை 24, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் அம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 5, “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை முதலமைச்சர் முதன் முறையாக கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 10, கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

ஆகஸ்ட் 11, ராநே்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆகஸ்ட் 23, தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் பாலியல் வீடியோ இணையத்தில் வெளியாகி, தமிழக அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 24, பாலியல் வீடியோவில் சிக்கிய கே.டி.ராகவன், பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆகஸ்ட் 28, மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

செப்டம்பர் 8, தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குரல் வாக்கேடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 9, தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 12, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் நடத்தும் போது, சம்ஷ்கிருத பாடல்களுடன் தமிழ் பாடல்கள் கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர் 13, தமிழக அரசு வேலையில் உள்ள பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

செப்டம்பர் 13, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 16, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

செப்டம்பர் 18, தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, பொறுப்பேற்றுக்கொண்டார்.

அக்டோபர் 3, தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், ஆசிரியர் ராஜகோபலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.

அக்டோபர் 13, 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது.

அக்டோபர் 15, தமிழகத்தில் இளம் வயது ஊராட்சித் தலைவராக செங்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 21 வயதான கே.அனு என்ற இளம் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபர் 18, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 20, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துறை வையாபுரி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அக்டோபர் 20, “இல்லம் தேடி கல்வி” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஷ்டாலின், மரக்காணம் அருகே தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 29, கோயில்களில் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான அஸ்வினி என்ற பெண் அளித்த பேட்டியின் எதிரொலியாக, தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,  நரிக்குறவப் பெண் அஸ்வினியுடன் அமர்ந்து கோயில் அன்னதான உணவை சாப்பிட்டார்.

நவம்பர் 4, நரிக்குறவ பெண் அஸ்வினி வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். அப்போது, குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

நவம்பர் 6, சென்னையில் ஒரே நாளில் கிட்டதட்ட 230 மி.மீட்டர் மழை பெய்ததால் சென்னையே வெள்ளக்காடானது.

நவம்பர் 12, பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டார். 

நவம்பர் 15, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

நவம்பர் 24, “சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

நவம்பர் 26, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த அவரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி.லீலாவதி உயிரிழந்தார்.

நவம்பர் 28, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி பண மோசடி புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 3, அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

டிசம்பர் 6, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

டிசம்பர் 7, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று சசிகலா சந்தித்து பேசினார்.

டிசம்பர் 8, நீலகிரி மாவட்டம் குன்னூர் சென்ற ராணு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், நம் நாட்டின் முதல் முப்படைத் தலைமை தளபதியான விபின்ராவத், அவரது மனைவி உள்ளிட்ட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் 10, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவி, ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிசம்பர் 15, முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டிசம்பர் 15, தமிழ்நாட்டில் முதன் முறையாக சென்னையை சேர்ந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

டிசம்பர் 19, வங்கக் கடலில் மீன்படிக்கச் சென்ற தமிழக மீன்வர்கள் 55 பேரை, இலங்கை கடற்படை அதிரடியாக கைது செய்தது.

டிசம்பர் 21, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராகப் பணிபுரிந்த கோ.சண்முகநாதன் உயிரிழந்தார்.

டிசம்பர் 29, ஃபேஸ்புக் பக்கத்தில் “நான் தான் ஆதிபராசக்தியின் புதிய அவதாரம்” என்று கூறிக்கொண்டு, அன்னபூரணி என்ற பெண், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டாக மாறிப்போனார். இந்த சூழலில் தான், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக” பெண் சாமியார் அன்னப்பூரணி, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிசம்பர் 30, “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற, சிறுகதை தொகுப்பிற்காக, எழுத்தாளர் மு.முருகேஷுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான “பால சாகித்ய புரஸ்கார்” விருது அறிக்கப்பட்டு உள்ளது. அதே போல், சிறுகதை எழுத்தாளர் அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமிக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.