தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நானி தெலுங்கு திரையுலகை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ, கேங் லீடர், ஜெர்ஸி உள்ளிட்ட நானியின் திரைப்படங்கள் தமிழிலும் ஹிட்டடித்தது.

முன்னதாக நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் நடந்துமுடிந்த 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நானி நடிப்பில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக நானி-நஸ்ரியா இணைந்து நடிக்க தயாராகியுள்ளது அன்டே சுந்தரனிக்கி திரைப்படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா எழுதி இயக்கும் அன்டே சுந்தரனிக்கி படத்திற்கு விவேக் சாகர் இசை அமைக்க, நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு படத்தின் ZERO-th லுக் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் என்ற வழக்கமான அறிவிப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள சுவாரஸ்யமான இந்த அறிவிப்பும் நானியின் கதாபாத்திரத்தின் பெயரான K.P.V.S.S.P.R.சுந்தர் பிரசாத் என்ற பெயரும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.