புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்தலைவருமான ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

puducherry liquor allowedஇந்த வழக்கு விசாரணையின் போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலா, “தடுப்பூசி போட்டிருந்தால் தான் விடுதிகளில் தங்க முடியும், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்ற வேண்டும், விடுதிகளில் 50 சதவீதம் நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்” என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் சென்னையில் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, பொருளாதார நிலையை மட்டுமல்லாமல் பொதுமக்களின் உயிரையும் கருத்தில் கொள்ள வேண்டாமா எனவும், கொரோனா மெல்லத்தான் தொடங்கும், ஆனால் பாதிப்புகள் அதிகமாகும் எனவும், சில நாட்களுக்கு மதுபான விற்பனையையாவது தடை செய்தால் என்ன என கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த புதுச்சேரி அரசு வழக்கறிஞர் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த மாநிலங்களில் கூட மதுபான விற்பனைக்கு தடை விதிக்கவில்லை எனவும் மாநில அரசின் வருவாயை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பொது இடங்களில் மதுபானங்கள் அருத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதை கண்காணிக்க சிறப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அரசு வழக்கறிஞர், கொரோனா பாதிப்பில் மாநிலத்தின் நிலை மோசமாக இல்லை என்று கூறியதோடு, அந்தந்த மாநிலங்களின் நிலையின் அடிப்படையில் முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் மக்கள் நலனில் எந்த சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் கூறினார்.

மேலும் மக்களின் நிலை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இந்த இரண்டு நாட்கள் மதுபான விற்பனை வருமானம் தான் அரசு ஊழியர்களின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான ஊதியம் எனவும் அவர் தெரிவித்தார்.

puducherry liquor allowedஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ளலாம் எனவும், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரையிலான மூன்று மணி நேரத்துக்கு மாநிலத்தில் மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதித்தனர். 

மேலும் மதுபான கடைகளும், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுபான விற்பனை கூடாது. பொது இடங்களில் மது அருந்தக் கூடாது, விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தங்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர். 

அதேசமயம் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை. பொதுஇடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும்.

பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்கக் கூடாது. தனி இடங்களில் பங்கேற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.