14 வயது சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள திருவக்கரை பகுதியைச் சேர்ந்த 35 வயதான கற்பகம், அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த 14 வயது சிறுமியின் தந்தை, உடல் நிலை பாதிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் தாயார் 35 வயதான கற்பகத்திற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 40 வயதான சுந்தரமூர்த்தி என்பவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, தாயார் கற்பகம் தனது 14 வயது மகள் மற்றும் கள்ளக் காதலன் சுந்தரமூர்த்தி உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி தனது தாயாருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், தாயார் கற்பகம் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, கற்பகத்தின் கள்ளக் காதலன் சுந்தரமூர்த்தி, அடிக்கடி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், “இது தொடர்பாக குறித்து யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும், அவன் மிரட்டியதாகவும் தெரிகிறது. 

இப்படியாக நாட்கள் செல்ல செல்ல நாளடைவில், சுந்திரமுர்த்தியின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமைகளை அந்த சிறுமி, தனது தாயார் கற்பகத்திடம் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த தாயார் கற்பகம், சுந்திரமுர்த்தியிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது, அவர் சண்டைக்கு வந்ததாகத் தெரிகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த கற்பகம், இது தொடர்பாக அங்குள்ள கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுந்திரமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிறுமியிடம் 
பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் சுந்திரமூர்த்தியை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். 

முக்கியமாக, பாதிக்கப்பட்ட சிறுமியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், சிறுமியின் தாயார் கற்பகத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும், அவருக்கு போலீசார் நல்ல அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தந்தை ஸ்தானத்திலிருந்த ஒருவர், மகள் போன்ற ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.