நடிகையை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆபாசமாகப் படம் எடுத்து இளைஞன் ஒருவன் மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “நான் 11 திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாக நடித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “எனது தோழி மூலம் அறிமுகமான, சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை நான் காதலித்து வந்தேன். அந்த ராஜேஷ் தனியார் நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் தொழில் செய்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினோம். எங்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 

அதன் தொடர்ச்சியாக, காதலன் ராஜேஷ் என்னிடம் ஆசை வார்த்தை கூறி, தனியார் விடுதிக்கு என்னை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் ரீதியாக உறவு கொண்டார். நானும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையில் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால், திருமண தேதி நெருங்க நெருங்க அவர் என் மீது விருப்பம் இல்லாதது போல் நடந்து கொண்டார். 

இது பற்றி காதலன் ராஜேஷிடம் கேட்டபோது, ' உன்னிடம் உல்லாசம் இருக்கவே திருமண நாடகம் நடத்தியது' போல், அவர் பேசினார். இதனைக் கேட்டு நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன். 

மேலும், என்னுடன் நெருக்கமாக இருந்து எடுத்து வைத்துக்கொண்ட படங்கள், மற்றும் என் தொடர்பான ஆபாசப் படங்களை வைத்து என்னை மிரட்டி சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை இதுவரை என்னிடம் மிரட்டி பெற்றுள்ளார். இவற்றுடன், இன்னும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறுகிறார். அதனால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அந்த புகார் மனுவில் பாதிக்கப்பட்ட நடிகை கூறியிருந்தார்.

ஆனால், இந்த புகார் மனு குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்த நிலையில், அதேபோன்ற ஒரு புகார் மனுவை  ராஜேஷ் குடியிருக்கும் பகுதியான மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திலும் அந்த நடிகை அளித்துள்ளார். ஆனால், அங்கும் புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, “தன்னை ஏமாற்றி பணம் பறித்த ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட அந்த சின்னத்திரை நடிகை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு” பிறப்பித்துள்ளது. 

தற்போது, நீதிமன்ற உத்தரவின் படி, காதலன் ராஜேஷ் மீது, பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராஜேஷிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், சக சின்னத்திரை நடிகர் நடிகைகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.