தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இது ஒரு சமையல் சார்ந்த ஷோ என்றாலும், இதில் வரும் கோமாளிகளின் சேட்டைகளுக்காகவே உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஒரு சீசன் முடிந்த தற்போது இரண்டாவது சீசனிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 

முதல் சீசனில், வனிதா விஜயகுமார், பட்டத்தை வென்றிட, தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் இந்த வாரம் பொங்கல் கொண்டாட்ட வாரமாக குக் வித் கோமாளியில் கொண்டாடப்படுகிறது. இதனால் எந்த எலிமினேஷனும் இருக்காது. அதே நேரத்தில் பழைய போட்டியாளர்களும் பங்கு பெறுவார்கள். இதனால், கூடுதல் உற்சாகத்துடன் நிகழ்ச்சி இருக்கும்.

இப்படிபட்ட நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், இந்த வார சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார். இது குறித்தான ப்ரோமோ வெளியாகி படு வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன், தன் கலை வாழ்க்கையை டிவியிலிருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர், தொடர்ந்து டிவியின் Anchor-ஆக உயர்ந்தார். அதன் பின் வெள்ளித்திரையில் காமெடியனாக என்ட்ரி கொடுத்து, தற்போது ரசிகர்கள் விரும்பும் ஹீரோவாக பயணிக்கிறார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் சம்பாதித்த தொலைக்காட்சி ஆடியன்ஸ். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இரண்டு நாட்கள் முன்பு நிறைவடைந்தது.

டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.