திரை ரசிகர்களுக்கு தொடர்ந்து சுவையூட்டும் செய்திகளை தெரிவித்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன். சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை கூறினார். இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாக செல்வராகவனிடம் கேட்டு வந்த நிலையில், நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் பதிவு செய்தார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 டைட்டில் லுக்கையும் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் தனுஷ் வைத்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பணிகள் தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 12வது படம் இது. படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வாரம் தொடர்ந்து தனுஷ் படத்தின் அப்டேட்டுகள் வருவதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்போதைக்கு D43 என்று அழைக்கப்படும் இப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் ஒப்பந்தமானார். 

செல்வராகவன் கைவசம் சாணிக் காயிதம் படமும் உள்ளது. செல்வராகவன் நடிகராக களமிறங்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்றது.