2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் சார்லி. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படம் தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. 

திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர். 

வரும் ஜனவரி 8-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. மாறா திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஹிட்டான படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அதில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

இந்நிலையில் படத்தின் கேரக்டர் ப்ரோமோ காட்சி தற்போது வெளியானது. ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்ஸ் திருடன் பாத்திரத்தில் நடித்துள்ளார். Meet The Thief என்ற ப்ரோமோ திரை விரும்பிகளை கவர்ந்து வருகிறது. மேடை நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், ஸ்டாண்ட் அப் காமெடி என தனது பன்முகத்திறனால் என்டர்டெயின் செய்த அலெக்ஸ் இந்த படத்திலும் ரசிகர்களை ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி படத்தை ரிலீஸுக்கு வைத்துள்ளார் மாதவன். இந்த படத்தில் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். சென்ற லாக்டவுனில் திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.