பாலின சமத்துவத்தில் கடந்த ஆண்டை விட இந்தியா இந்த ஆண்டு மிகவும் பின்னடைந்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலம், இந்த உலகத்தையே தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது என்றால், சம்ப முடிகிறதா?! ஆம், அது தான் உண்மை.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உயிரை மட்டுமல்ல, உயிரோடு விட்டு வைத்தாலும், அவர்களைப் பொருளாதார ரீதியான நெருக்கடிகளைத் தந்து, மிகப் பெரிய ஏழையாகவும் மாற்றும் சக்தி படைத்த நோயாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் அதாவது தினசரி வருமானம் 725 ரூபாய் முதல் 1,450 ரூபாய் வரை வருமானம், தற்போது மூன்றில் ஒரு பங்காக சுருங்கி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், கொரோனா நோய் தொற்று காரணமாக, தூண்டப்பட்ட மந்த நிலையால் நாட்டின் ஏழைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது என்பதும், இதன் மூலம் தெரிய வந்திருப்பதாக அமெரிக்காவில் உள்ள வாசிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இலாப நோக்கற்ற “பியூ ரிசர்ச்” அறிக்கை ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் பெருந் தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பல்வேறு துறைகளையும் மட்டும் இல்லாமல், பெண்களின் வாழ்க்கை நிலைமைகளையும் பாழ் படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்தியாவில் பாலின சமத்துவம் பின்னடைவைச் சந்தித்து உள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக உலகப் பொருளாதார மன்றமான World Economic Forum ன், சமீபத்திய அறிக்கையின் படி, மொத்தம் 156 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பாலின இடைவெளி தர வரிசையைப் பட்டியலிட்டு உள்ளது.

அதில், மக்களாட்சி நாடானா இந்தியா, கடந்த ஆண்டை விட, கிட்டத்தட்ட 28 இடங்கள் குறைந்து 140 வது இடத்தைப் பிடித்து உள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டில், கிட்டதட்ட 153 நாடுகளின் பட்டியலில், இந்தியா பாலின சமத்துவத்தில் 112 ஆவது இடத்தில் இருந்தது. பாலின சமத்துவம் தரவரிசையில் மற்ற நாடுகள் ஆசிய நாடுகளான பாகிஸ்தான் 153 வது இடத்தில் இருந்தது. 

அது போல், ஆப்கானிஸ்தான் பாலின சமத்துவத்தில் 156 வது இடத்திலும் இருக்கின்றன. 

மறுபுறம், இந்தியாவை விட மக்கள் தொகை குறைவாக உள்ள, வங்க தேசம் 56 வது இடத்தையும், நேபாளம் 106 வது இடத்தையும், இலங்கை 116 வது இடத்தையும், பூட்டான் 130 வது இடத்தையும் பிடித்துச் சிறப்பாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, பாலின சமத்துவத்தில் முன்னேறி உள்ள ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

உலகளாவிய பெண்கள் வருவாய் உலகளாவிய மதிப்பீடுகளின் படி, “பெண்களின் வருவாயை ஆண்கள் வருவாயுடன் ஒப்பிடும் போது, அவை ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே இருக்கின்றன.

உலகில் பெண்கள் வருமானம் மிகக் குறைவாக இருக்கக்கூடிய கடைசி 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 8.9 விழுக்காடு பெண்கள் மட்டுமே நிர்வாகப் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். 

ஆனால், இந்த கொரோனா காலத்தில் பணிக்குச் செல்லும் பெண்களின் வலிமை 22 விழுக்காடு குறைந்து உள்ளது.
 
இந்த காலகட்டத்தில், சுமார் 20 வயதை அடைவதற்கு முன்பே பெரும்பான்மையான பெண்கள் தாய்மார்களாக மாறுவது போன்ற பல திடுக்கிடும் ஆய்வுகள் பாலின சமத்துவத்திற்குப் பெரும் தடையாகத் திகழ்கின்றன.

குறிப்பாக, ஆண் - பெண் கல்வி இடைவெளி படிப்படியாகக் குறைந்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி, 34.2 விழுக்காடு இருக்கும் பெண் கல்வி அறிவுடன் ஒப்பிடும் போது, ஆண்களின் கல்வியறிவு 17.6 விழுக்காடு மட்டுமே இருக்கிறது. இதனால், இந்தியா பெண்களின் கல்வி, திருமண வயது, சுதந்திரத்தில் கவனம் செலுத்துவது போலவே, பொருளியல், அரசியல் சார்ந்த காரணிகளிலும், பணிகளிலும் பெண்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும் என்றும், இதற்காக இந்தியப் பெண்கள் எப்போதே தயாராகி விட்டனர்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், ஐஐடி மும்பை கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வின் படி, “இந்திய அளவில் பாலின சமத்துவத்தில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக” தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.