ரகசிய கல்யாணம் செய்துகொண்டு, ரகசியமாக வாழ்க்கை நடத்தியபோது இரு முறை கர்ப்பம் அடைந்த காதலியை, காதலன் கழற்றி விட்டதால், காதலி தற்கொலை செய்துகொண்டார்.

ஐதராபாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸில் பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஐஸ்வர்யா என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த மாணவி, நர்சிங் படித்திருந்த நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, அந்த 20 வயதான நர்சிங் மாணவி, அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் மூழ்கியே இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், அந்த மாணவிக்கு இன்ஸ்டாக்ராம் மூலமாக ஆஷர் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடக்கத்தில் நட்பாகவே பழகி வந்தனர். ஆனால், போக போக இவர்களுக்குள் காதல் மலர்ந்து உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணைப் பரிமாறிக்கொண்டு, நேரில் சந்தித்து தினம் தினம் காதல் வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் இருவரும் காதலர்களாக வலம் வந்து இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், அவர்களின் இந்த திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், இருவரும் பேசி முடிவு செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலில் கடந்த 2020 ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரம் அந்த பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கணவன் - மனைவி வாழ்க்கையை ரகசியமான வாழத் தொடங்கினார்கள்.

இப்படியாக சில நாட்கள் சென்ற நிலையில், அதன் பிறகு அவர்கள் இருவரும் தங்களின் ரகசிய திருமணத்தைப் பற்றி தங்களது வீட்டில் கூறியிருக்கிறார்கள்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டார் பெற்றோரும், “காதலர்கள் இருவருக்கும் வருமானம் இல்லாததால் இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்ததும் இந்த கல்யாணத்தை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறி, இருவரையும் பிரித்து வைத்து விட்டார்கள்.

இதனால், இருவரும் ரகசிய வாழ்க்கையைக் கைவிட்டு விட்டு, தங்களது பெற்றோருடன் தங்கி வந்தனர்.

இந்த நிலையில், 20 வயதான நர்சிங் மாணவி, அந்த பகுதியில் ஒரு வேலைக்குச் செல்ல தொடங்கினார். இதனையடுத்து, அந்த பெண்ணும், அந்த பெண்ணின் காதல் கணவனும் மீண்டும் அந்த பகுதியில் வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து இருவரும் ஒரு வீட்டில் தங்கி கணவன் - மனைவியாக வசித்து வந்தனர்.

இந்த வாழ்க்கையில், அந்த பெண் ஐஸ்வர்யா 2 முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால், தனது காதல் கணவனின் பேச்சைக் கேட்டு அந்த பெண் தனது கர்ப்பத்தைக் கலைத்து விட்டார். இப்படியான நிலையில், இருவரும் மீண்டும் பிரிந்து தங்களின் பெற்றோரோடு இருவரும் சென்று விட்டனர்

இதனையடுத்து, தங்களது இந்த ரகசிய திருமண வாழ்க்கை பற்றி வெளி உலகத்திற்குத் தெரிவிக்கலாம் என்று, அந்த பெண் கூறியிருக்கிறார்.

ஆனால், இதற்கு அந்த காதல் கணவன் அஸெர் ஒப்புக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், தனது காதலனுக்கு வீடியோ மெஸேஜ் ஒன்றை அனுப்பி விட்டு, தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து அந்த பெண்ணின் காதல் கணவன் அஸெர் மற்றும் அவரது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.