நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று காலை தெரிய வந்தது. 

இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினார். இன்று காலை அவர் வெளியிட்ட பதிவில், தான் மருத்துவமனையில் அனுமதியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி என பதிவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவேன்...எச்சரிக்கையாக இருங்கள் எனவும் கூறியுள்ளார். 

அக்ஷய் குமார் ராம் சேது படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். மும்பை மாத் தீவில் இன்று நடக்கவிருந்த படப்பிடிப்பில் 100 பேர் கலந்துகொள்ளவிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அக்ஷய் குமாரும், படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் முடிவு செய்தனர். 

இதையடுத்து 100 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட 100 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் 45 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. 

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படக்குழுவின் பாதுகாப்பை கருதி அக்ஷய் குமார் பலமுறை கொரோனா பரிசோதனை செய்து கொண்டாராம்.

நடிகர் தனுஷுடன் அத்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். சாரா அலி கான் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.