தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குனராக வலம் வருபவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ஹே சினாமிகா. இந்த படம் மூலம் ஜியோ ஸ்டுடியோஸ் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைக்கிறது. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 12-ம் தேதி பூஜையுடன் துவங்கியது. அதன் பின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் துவங்கி நடைபெற்று முடிந்தது. ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். எடிட்டராக ராதா ஸ்ரீதர் மற்றும் கலை இயக்குனராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் பிருந்தா மாஸ்டர் பதிவு செய்துள்ளர். இறுதி கட்ட பணிகள் முடிந்து விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

துல்கர் நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் குருப். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் பீரியட் ஃபிலிமாக உருவாகியிருக்கிறது. இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெயின், சோபிதா எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

துல்கரும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியாக உள்ளது.