இளம் பெண்ணுடன் நின்ற இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர் 8 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

கர்நாடகா மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அடுத்து உள்ள கங்கனாடி ஆம்னி பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இளம் பெண் ஒருவர், ஒரு இளைஞருடன் அங்கே நின்று கொண்டிருந்தார். 

அப்போது, அந்த இளம் பெண்ணும், அந்த இளைஞரும் அங்கிருந்து பெங்களூருவுக்கு செல்வதற்காகப் பேருந்துக்கா காத்துக்கொண்டு நின்று உள்ளனர். அந்த நேரம் பார்த்து, அங்கு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பினர் சிலர், அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்று நினைத்து, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், அந்த இளைஞரும் அவர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த இளைஞரை அந்த கும்பல், கையில் வைத்திருந்த ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், அந்த இளைஞர் பலத்த காயமடைந்தார். இதனால், அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இந்த இளைஞரை மீட்டு, உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இது தொடர்பாக அந்த பகுதியினர் சிலர் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த கங்கனாடி போலீசார், பாதிக்கப்பட்ட இளைஞனிடம் வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “தட்சிணகன்னடா மாவட்டத்தில் மங்களூரு, பெல்தங்கடி, புத்தூர், சுள்ளியா உள்பட அந்த பகுதியில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் இளம் பெண்களுடன் வரும் இளைஞர்களைத் தாக்கி வருவதாகவும், இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்றும், அந்த பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தற்போது குரல் எழுப்பி உள்ளனர்.

இந்த பிரச்சனை அந்த பகுதியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், பொது மக்களின் சகிப்புத் தன்மையைப் போக்கும் விதமாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கங்கனாடி பகுதியில் பேருந்துக்கா இளம் பெண்ணுடன் காத்திருந்த இளைஞரை ஒரு அமைப்பினர் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 8 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட இளைஞரும், இளம் பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள்” என்றும், விளக்கம் அளித்தார். 

இந்த நிலையில், “இளம் பெண்ணுக்கு பெங்களூருவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை கிடைத்து உள்ளது என்றும், இதனால் பெங்களூருவுக்கு செல்ல இளம் பெண், அந்த இளைஞரை அழைத்துச் செல்ல திட்டமிட்டார்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அதன் படியே, அந்த இளம் பெண், தனது நண்பருடன் கங்கனாடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்கா அவர்கள் இருவரும் காத்துக்கொண்டு நின்றபோது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது” என்றும், கவலைத் தெரிவித்தார். 

அத்துடன், “இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றும், மங்களூரு பகுதியில் கடந்த 2 மாதங்களில் இது போன்ற 4 சம்பவங்கள் நடந்து உள்ளன” என்றும், அவர் வேதனை தெரிவித்தார். 

மேலும், “இனி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பூங்கா, மைதானங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறோம் என்றும், இனி இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காது” என்றும், அவர் உறுதி அளித்தார்.