“இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கிறார்களா?!” என்கிற கேள்வி தற்போது பரவலாகப் பரவத்தொடங்கி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் கடந்த 2 மாத்திற்கும் 
மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன், பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக, விவசாயிகள் மீண்டும் வரும் 6 ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர். இதனையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதைத் தடுக்கும் விதமாக, முற்றிலுமாக தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொது மக்களும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்து உள்ளார். அதே போல், உலக பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்றும் வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.

இதனால், உலகம் முழுமைக்கும் இந்திய விவசாயிகளின் போராட்டம் கவனம் பெற்றது. இதன் காரணமாக, உலகின் பல்வேறு தரப்பினரும் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “இந்தியா டுகெதர்” மெசேஜை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள், “விவசாயிகள் போராட்டம் எங்கள் நாட்டுப் பிரச்சனை” என்று, பகிர்ந்து உள்ளனர்.

அதன் படி,

சச்சின் டெண்டுல்கர் 

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. புதுச்சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, அதில் பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்” என்று டிவீட் செய்து உள்ளார்.

விராட் கோலி

“கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுக தீர்வை கண்டுபிடிப்பார்கள்” என்று நம்புகிறேன் என்று கூறி  #IndiaAgainstPropaganda மற்றும் #IndiaTogether ஹேஷ்டேகுகளையும் அவர் பகிர்ந்து உள்ளார்.

ரோஹித் சர்மா

“நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காணும் போது, நம் தேசம் எப்போதும் வலிமையாக இருந்துள்ளது. நம் நாட்டின் நன்மைக்கான பங்களிப்பில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதனால், அனைவரும் சுமுகத் தீர்வு காண ஒன்றிணைந்து செயல்படுவார்கள்” என்று, நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். 

ரஹானே

“நாம் ஒன்றாக இருந்தால் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இங்கு எதுவும் இருக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து நம் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்க்க பாடுபடுவோம்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

சுரேஷ் ரெய்னா

“நாம் ஒரு நாடாக தீர்ப்பதற்குரிய பிரச்சினைகள் இன்றும் உள்ளன, நாளையும் இருக்கும். அதற்காக நாம் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. புறச்சக்திகளினால் குழப்பமடைய வேண்டியதில்லை. நடுநிலைமையான உரையாடல் மூலம் அனைத்துக்கும் சுமூக தீர்வு உள்ளது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். 

கவுதம் கம்பீர்

“புறச்சக்திகள் நம்மைப் பிரித்தாள நூற்றாண்டுகளாக முயற்சி செய்கின்றனர். என்ன வந்தாலும் இந்தியா இதனை எதிர்த்து மீண்டு வரும். உங்கள் பில்லியன்களைப் பயன்படுத்துங்கள். சிறந்தவற்றை முயற்சி செய்யுங்கள். இது புது இந்தியா” என்றும், அவர் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி

“இந்தியப் பொருளாதார அமைப்பின் முக்கிய எந்திரம் விவசாயம். விவசாயிகள் எந்த நாட்டின் பொருளாதார அமைப்பின் முதுகெலும்பாவார்கள். இது உள்நாட்டு பிரச்சனை, உரையாடல் மூலம் நிச்சயம் தீர்வு காணப்படும். ஜெய் ஹிந்த்” என்று, தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே

“இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உள்நாட்டு விவகாரங்களைச் சுமுகமாகத் தீர்ப்பதில் திறன் படைத்தது என்பதற்கும் மேலான தன்மை கொண்டது. முன்னேறுவோம், மேலேறிச் செல்வோம்” என்றும், பகிர்ந்து உள்ளார்.

இப்படியாக, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரிப்பது போல் கருத்து கூறியிருப்பது, இணையத்தில் பெறும் விவாத பொருளாக மாறி உள்ளது. அத்துடன், “இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கிறார்களா?!” என்கிற கேள்வியையும், இணையத்தில் பலரும் எழுப்பி உள்ளது, வைரலாகி வருகிறது.