நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், டாக்டர் மற்றும் அயலான் படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அறிவிப்பு தொடர்ச்சியாக வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது. இயக்குனர் அட்லியிடம் மெர்சல், பிகில் போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள டான் படமாகும். 

சிவகார்த்திகேயனின் 19-வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில், பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 30 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

மேலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான் படத்தில், எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக திரைத்துறையில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் இணைந்துள்ளனர். 

இந்நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் மார்ச் 26 ஆம் தேதி டாக்டர் படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகனின் ஒரு படம் கூட இதுவரை தமிழில் வெளியாகவில்லை. அதற்குள், டாக்டர் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யா 40 படத்தில் நடிக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது டான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறார்.