லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவருடைய காட்சிகளை வைத்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகின்றன.

தளபதி விஜய்யிடம் கோபப்பட்டு பேசும் காட்சிகளை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டன. இது தொடர்பாக மாளவிகா மோகனன் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் எனப் பலரும் எதிர்நோக்கினார்கள். ஆனால், அவரோ அதை மிகவும் ரசித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் தனது மீம்ஸ் தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது மக்களே. என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன். 

அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா? என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார்.