புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடித்தது முதல் அரசியலில் ஈடுபட்டது வரை என சுமார் 40 ஆண்டுகள் அவருக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சண்டை பயிற்சி கலைஞரான ராமகிருஷ்ணன் எம்ஜிஆர்-க்கு ஏராளமான படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார். 

இந்நிலையில், எம்ஜிஆர் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் திரைத்துறையினர். 

கேரள மாநிலம் பாலக்காடு பக்கத்தில் சின்ன கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக 12 வயதில் சென்னைக்கு வந்தவர் ஆவார். சௌகார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலைக்குச் சேர்ந்து, குறைந்த சம்பளம் வாங்கி அதன் பின் சினிமா ஸ்டுடியோக்களுக்குப் போய் வாய்ப்பு தேடி வந்தவர். 

அப்போது நேரம் கிடைக்கும்போது சண்டையும், சிலம்பமும் கற்றுத் தேர்ந்தார். ஒரு நாள் பொங்கல் பண்டிகையின் போது இவரை எம்.ஜி.ஆர். பொங்கலுக்கு என் வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். அப்போது, இவரும் அவரது சீதாராம் என்ற கன்னடக்கார நண்பரும் சென்றுள்ளனர். பெரிய மனிதர்களுக்கு விருந்து வைப்பதுபோல பொங்கலுடன் விருந்து உபசாரம் செய்து புறப்படும்போது எம்.ஜி.ஆர் இவரது  கையில் எட்டணா கொடுத்து அனுப்பியதாகவும், அப்போது முதல் இவர்களது நட்பு தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆருக்காக முதன்முதலில் நாடோடி மன்னன் படத்தில் டூப் போட்டு நடித்துள்ளார். அப்போது முதல் அவர் மறையும் வரை அவருக்கு மெய் காப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.ராமகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபங்களை தெரிவிக்கிறது நம் கலாட்டா.