புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதன் பின்பு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 


விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவாக பலர் குரல் கொடுத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,’’ டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை பகிர்ந்து, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதே போல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் மியா கலிஃபாவும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 


இதன்பின்பு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டத்தை மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே  எதிர்த்து வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு தான்  அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.