உலக நாடுகளை மீண்டும் அதிர வைக்கும் ஒமிக்ரான் வைரஸ் தற்போது செயல்பட்டு வரும் தடுப்பூசியில் திறம்பட செயல்பட்டு ஒமிக்ரான் வைரஸை எதிர்த்து போராடுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் என்ன கூறியுள்ளன என்பதை காணலாம்.

சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ்  உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முடக்கிவைத்த நிலையில்,  ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனித்தனியாகவும், சில நாடுகள் கூட்டாகவும் தடுப்பூசியை கண்டுப்பிடித்தன.

இதனால் தற்போது உலக நாடுகளிடையே இயல்பு வாழ்க்கை சற்று திரும்பிய நிலையில், தென்னாப்பிரிக்கா நாட்டில் 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ், இதுவரை 13 நாடுகளுக்குப் பரவியுள்ளது. 

vaccine omicron

மேலும் சில நாடுகளுக்கு பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கொரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதைத் தடை செய்துள்ளனர்.
 
இந்த சூழலில் ஒமிக்ரான் கொரோனாவிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று ஏற்படலாம் எனவும், ஆனால் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பைசர் நிறுவனம் ஒருவேளை தங்கள் நிறுவனத்தின் தற்போதைய தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படாமல் போகலாம் என்பதால், அதற்கு எதிரான ஒரு தடுப்பூசி வெர்சனை உருவாக்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
 
அதேபோல் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம், ஒமிக்ரானுக்கு ஏற்றாற்போல, ஸ்புட்னிக் தடுப்பூசி வெர்சன் ஒன்றை தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இப்போது இருக்கும் தடுப்பூசியில் மாற்றம் தேவையென்றால் ஸ்புட்னிக்கின் ஒமிக்ரான் வெர்சன் 45 நாட்களில் பெரும் அளவிலான உற்பத்திக்குத் தயாராகிவிடும் எனக் கூறியுள்ளது.
 
ரஷ்யாவை தொடர்ந்து கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா, ஒமிக்ரான் மீதான கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். 

மேலும் ஆக்ஸ்போர்டில் உள்ள நிபுணர்களும் ஆய்வை தொடர்ந்து வருவதாகவும், அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பூஸ்டராக செயல்படும் ஒரு புதிய தடுப்பூசியை ஆறு மாதங்களில் தாங்கள் உருவாக்கலாம் எனவும் அதார் பூனவல்லா கூறியுள்ளார். 

ஆய்வின் அடிப்படையில் நமக்கான மூன்றாவது டோஸ், நான்காவது டோஸ் பற்றியும் அறிந்துகொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

coveid vaccine omicron

பயோடெக் நிறுவனம் பைசர் நிறுவனத்துடன் இணைந்து ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஒமிக்ரானுக்கு எதிராக தனியான ஒரு தடுப்பூசியை உருவாக்கி வருவதாகவும், தேவைக்கு ஏற்ப அதனை மேம்படுத்துவோம் என கூறியுள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வகை வைரசுக்கு எதிராக செயல்பட்ட திறனுடன் புதிய வகை ஒமிக்ரான் வைரசுடன் திறம்பட எதிர்த்து போராட முடியாது என்று அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக கொரோனா பெருந்தொற்று நீண்ட காலம் தொடரும் எனவும் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை கண்டறிந்து தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளில் அடுத்த ஆண்டிலிருந்து சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் ஸ்டீபன் பான்செல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

புதிய வகை ஒமிக்ரான் காரணமாக உலகின் பல நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.