தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில் 36 சதவிகிதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் எழுந்துள்ள கொரோனா 2 வது அலைக்கு பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் அலையை கட்டுப்படுத்த முடிந்த நிலையில், இந்த 2 வது அலையானது, தமிழகம் உட்பட இந்தியாவுக்கு மாபெரும் சவாலாக இருக்கிறது. 

இப்படியான நிலையில், தமிழகத்தில் நேற்று மட்டும் கிட்டத்ட்ட 6,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதில், சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல், நேற்றைய தினம் கொரோனா தொற்றில் இருந்து 2,339 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

குறிப்பாக, கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 82 ஆயிரத்து 202 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. 

அதே போல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்து உள்ளது. 

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 8 நபர்களைச் சேர்த்து மொத்தம் 6,671 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக” கூறியுள்ளது. 

இதில், “அதிகபட்சமாக சென்னையில் 2,105 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 நபர்களுக்கும், கோவை மாவட்டத்தில் 604 பேருக்கும் நோய் தொற்று உறுதி” செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதன் மூலமாக, “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையான 9,40,145 ஆக அதிகரித்துள்ளது என்றும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,308 ஆக உயர்ந்து உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, “இப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 36 சதவீதம் பேர், அதாவது 17,098 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்” என்றும், தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

“கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும், இது வரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது 8,80,910 ஆக அதிகரித்து உள்ளது” என்றும், தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதனிடையே, “கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.