ரசனை நிறைந்த விளம்பரப் படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மாறா. இந்த படத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர். 

2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் சார்லி. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுவது என முடிவானது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியாகவிருந்த மாறா திரைப்படம் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 8-ம் தேதி மாறா வெளியாகும் என்ற அறிவிப்பை சமீபத்தில் அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

மாறா திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்தது. கடந்த மாதம் மாறா படத்திற்கான டப்பிங் பணியையும் நிறைவு செய்தனர் படக்குழுவினர். 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஹிட்டான படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அதில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத். முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அழகான இடங்களில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் திலீப். 

இந்த படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி படத்தை ரிலீஸுக்கு வைத்துள்ளார் மாதவன். இந்த படத்தில் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். சென்ற லாக்டவுனில் திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.