திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து உறுதியுடன் வெளியே வருவேன் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களில் என்னோடு இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை குறித்த தகவல்களை விரைவில் தெரிவிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார் ராம்சரண். 

ராம் சரண் விரைவில் குணமடைய அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்தபோது ராம் சரணின் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். குணமடைந்த பிறகு தன் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவின் திருமணத்தில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி.

ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தில் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படமாகும். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வரை ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராம் சரண் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடினார் ராம் சரண். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு என்றால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மொத்த குடும்பத்தாரும் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி வருகின்றனர் திரை ரசிகர்கள்.