பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிவரும் 2,500 ரூபாய் பரிசு தொகையை அவர்களின் சொந்த நிதியில் கொடுப்பது போல் நடந்துக்கொள்வதாக திமுக சார்பில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தது, 


’’ தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்ததே விதி மீறல். மேலும் பொங்கல் பரிசுத் தொகையான 2,500 ரூபாயை சொந்த கட்சி நிதியில் இருந்து கொடுப்பதை போல, அதிமுக தொண்டர்கள் நடந்துக்கொள்கிறார்கள். கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு வழங்குவது போல்,  மக்களின் வரி பணம் மற்றும் அரசு கஜானா பணம் அதிமுக தேர்தல் பிரச்சார நிதியாக கொடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் தொகுதிகளில் அவர்களின் பெயரை பயன்படுத்தி பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது . இதைப்பற்றி  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூத்திடம் மனு அளித்துள்ளோம். இதுதொடர்பாக விசாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஒருவேளை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், 2,500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை அவர்கள் சொந்த நிதி போல் கொடுத்து பிரச்சாரம் செய்து வருவது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தை நாடுவோம்”என்றார்.